
செய்தியாளர் கேப்டன் வசந்த்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 04.05.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (30.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், வாக்கு எண்ணிக்கை நாளில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் துல்லியமாகவும், ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சீருடனும் நடைபெற அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள்: வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வருவதற்கான வழித்தடங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். போதிய தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு வழங்குதல், மொபைல் போன்கள் நுழைவு வாயிலில் சேகரித்து பாதுகாப்பாக வைப்பது, போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகள் காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக மாவட்ட கிடங்கிற்கு கொண்டு செல்லவும், அஞ்சல் வாக்குகளை பாதுகாப்புடன் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் அலுவலர்களின் பணிகள்: வாக்கு எண்ணும் முகவர்கள் நியமனம், மேஜை ஒதுக்கீடு குலுக்கல் முறையில் செய்தல், தேவையான பொருட்கள், உணவு, குடிநீர் ஏற்பாடு, பணியாளர்களுக்கு ஆணை வழங்குதல், அஞ்சல் வாக்குகளை மையத்துக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகள்: வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமித்தல் போன்ற பணிகளை ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அறிவிப்பு மற்றும் தகவல் பரிமாற்றம்: வாக்கு எண்ணும் மையங்களில் வழிகாட்டி பலகைகள், உள்ளே-வெளியே செல்லும் வழிகள் குறித்த பதாகைகள் அமைத்தல், மொபைல் பாதுகாப்பு அறை அமைத்தல், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு உணவு அரங்கம் அமைத்தல் போன்ற பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு சுற்று வாக்கு விவரங்களையும் அறிவிக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தகவல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவ மற்றும் அவசர சேவைகள்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள், அவசர மருந்துகள் மற்றும் வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மருத்துவத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்பதால், அதை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி மு. அனிதா (பெரம்பலூர்), திரு. ரெ. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

