
செய்தியாளர் :விஜய்
நாகப்பட்டினம், ஜூன் 4:
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி நகராட்சிப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்று பாடநூல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கோடை விடுமுறைக்கு பிறகு மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 476 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 116 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், 101 தனியார் பள்ளிகள் என மொத்தம் 693 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 1.02 லட்சம் மாணவர்கள் பயில உள்ளனர் என்றார்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 68,680 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், காலுறைகள், காலேந்திகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்கள், புவியியல் வரைபடங்கள் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த கல்வியாண்டில் மாவட்டத்தில் 2,99,130 பாடநூல்கள், 4,38,193 பாடக்குறிப்பேடுகள், 61,647 புத்தகப்பைகள், 18,015 காலணிகள், 95,719 காலேந்திகள் மற்றும் காலுறைகள், 6,946 புவியியல் வரைபடங்கள், 8,839 கிரையான்கள், 12,662 வண்ணப்பென்சில்கள் மற்றும் 15,888 கணித உபகரணப் பெட்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். இரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் கி. திவ்யபிரபா, மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரம், வட்டார கல்வி அலுவலர்கள் நா. மணி, நா. விமலா, பள்ளித் தலைமையாசிரியர் ரோஸ்லின் தங்கமலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
<b> Total Views: 42 </b>

