
அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள் கைது – துறையூர் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே பரபரப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துநர் பன்னீர்செல்வம், வழக்கம்போல் இன்று துறையூர்–முசிறி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது முசிறியிலிருந்து துறையூர் வழியாக வேங்கடத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் கீரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் துறையூரில் ஏறியதாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்தபோது, ஓட்டுநர் தன் மீது கை வைத்ததாக அந்த பெண் தனது ஆண் உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்து துறையூரில் இருந்து வேங்கடத்தனூர் செல்லும் போது அடிவாரம் பகுதிக்கு சென்றபோது, அங்கு காத்திருந்த சில இளைஞர்கள் பேருந்து அங்கு நின்றவுடன் ஏறி நடத்துநர் பன்னீர்செல்வத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர் இதனால் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் 108 வாகன மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒன்று திரண்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிபடையில் துறையூர் காவல்துறையினர், லாடபுரத்தைச் சேர்ந்த கவியரசன் மற்றும் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் துறையூர் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் அரசு போக்குவரத்து ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடந்திருப்பது போக்குவரத்து ஊழியர்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
<b> Total Views: 79 </b>

