திருச்சி காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

திருச்சி

செய்தியாளர் : அருண் : 90959 25936 

திருச்சி நகரின் முக்கிய புனித நீராடும் தலமான அம்மா மண்டபம் அருகே காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு நீர் திறக்கப்படாததால், திருச்சி பகுதிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது குறைந்தளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றின் பல பகுதிகளில் நீர் தேங்கி குளம்போல் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகே தேங்கி நிற்கும் நீரில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நீரோட்டம் இல்லாததால் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கலாம் அல்லது நீரின் தரம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இருப்பினும், மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் அதிகாரப்பூர்வ ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நீரின் தரத்தை ஆய்வு செய்து, மீன்கள் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்றி, அம்மா மண்டபம் படித்துறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் காவிரி ஆற்றின் தற்போதைய நீர்வரத்து நிலை மற்றும் நீரின் தரம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *