உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு நடைபயணம்

அரியலூர்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரசாரம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட உடையார்பாளையம் நகரில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது.

இதையொட்டி, உடையார்பாளையம் கடைவீதியில் இருந்து தொடங்கிய நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகவும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து, மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், கட்சியின் கொள்கைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பரப்புரையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் கே. நடராஜன் தொடங்கி வைத்து தலைமை ஏற்றார். அப்போது, மத்திய பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், அவற்றால் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் பேசினார்.

மேலும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வி.தொ.ச. மாவட்ட அமைப்பாளர் எஸ். ஆனந்தன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பன்னீர்செல்வம், உடையார்பாளையம் இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் மணிகண்டன், ஜெயங்கொண்டம் விவசாய சங்கத் தலைவர் ராஜாராமன், கே. ரமேஷ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைத் தலைவர் கே. ரமேஷ் நன்றி கூறினார்

 

<b> Total Views: 39 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *