
செய்தியாளர் : விஜய்
நாகூர் அடுத்த வாஞ்சூர் சோதனைச் சாவடி அருகே, சிபிசிஎல் ஆலை விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை – தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் அமைந்துள்ள சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக முட்டம், கோபுராஜபுரம், பனங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் 618 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, விவசாயிகள், சாகுபடிதாரர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிபிசிஎல் நிறுவனம் சார்பில் 2,165 பயனாளிகளுக்கான மீள்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற (R&R) தொகையாக 118 கோடி ரூபாய் மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததால், முதற்கட்டமாக 600 நபர்களுக்கு அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலமாகத் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தேர்தல் முடிந்த பிறகு மீதமுள்ளவர்களுக்குத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பனங்குடிப் பகுதியைச் சேர்ந்த சுமார் 400 பயனாளிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பனங்குடி கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று நாகூர் அடுத்த வாஞ்சூர் சோதனைச் சாவடி பகுதியில் சென்னை – தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
<b> Total Views: 28 </b>

