இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

அரியலூர்

அரியலூர்,ஏப்.15

அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக வி.கைகாட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில், இரண்டரை வயது சிறுமி முதல் பள்ளி மாணவி வரை, பாலியல் வன்கொடுமைக்கும் கொலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.அந்த அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

திமுக ஆட்சியில், போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள கஞ்சா, போதைப் பொருள்கள் தமிழ்நாட்டில் எளிமையாக கிடைக்கின்றது. எனவே உங்கள் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயி எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி காலத்தில் மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கினார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கெடுத்துவிட்டார். எனவே கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமா, கெடுத்த ஸ்டாலின் வேண்டுமா, என்று நீங்கள் முடிவு எடுங்கள்.

.கடந்தாண்டு மட்டும் கொள்ளிடம் ஆற்றில் 150 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அரியலூரில் இந்த கொள்ளிடம் ஆற்று நீரை செம்பியன் மாதேவி ஏரி, சுத்தமல்லி ஏரி, கரைவெட்டி ஏரி, சோழகங்கம் ஏரிகளில் நிரப்பினால், இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவை, விவசாய முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் வாழக் கூடாது என்று திமுக சூழ்ச்சி செய்கிறது.

சோழர் பாசன திட்டம் என்ற பெயரில், அரியலூர் மாவட்டத்தில் 2 நாள்கள் நான் நடைப்பயணம் மேற்கொண்டும் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசாகவே திமுக அரசு செயல்பாடுகள் இருந்தன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பிகார், ஒடிசா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சமூக நீதி கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள முதல்வர் ஸ்டாலின் அதனை நடத்த மாட்டார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்தால், அனைத்து சமுதாய மக்களுக்கும், மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இதில் பட்டியல் இன மக்களுக்கும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
பாஜக தமிழகத்தில் உள்ளே வந்து விடும் என்று திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பொதுமக்களிடம் எடுபடவில்லை. திமுகவினர் வழங்கும் ரூ.8,000 க்கான கூப்பனை குப்பையில் தூக்கி எறியுங்கள்.கூப்பனை நம்பி ஏமாந்து திமுகவுக்கு வாக்களித்து விடாதீர்கள்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில், உங்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.10 ஆயிரம் வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்.
திமுகவினர், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்களை ஒரு வாக்கு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். .சென்ற முறை சட்டமன்ற உறுப்பினராக தாமரை எஸ் ராஜேந்திரன் பதவி வகித்து இப்பகுதியில் கிராமப்புறசாலை வசதிகள், மருத்துவக் கல்லூரி,பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தியுள்ளார். அதன்படி இந்த முறை அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.மேலும் தமிழ்நாட்டை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் தான் தமிழகம் வளர்ச்சி பாதையில் நோக்கி நகரும் , ஒளிரும் என பேசினார் .

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *