சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா: இன்று ஸ்ரீ சண்டி மகாயாகம்

பெரம்பலூர்

 

செய்தியாளர் : கேப்டன் வசந்த்….

 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் ஆன்மிக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற இக்கோவிலில், சென்னை கோட்டூரில் இயங்கி வரும் ஸ்ரீமஹா மேரு மண்டலி சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனை மற்றும் ஸ்ரீ சண்டியாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் 17-வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது.

மண்டலியின் நிறுவனர் மதுராம்பிகானந்த ப்ரஹ்மேந்த்ர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமையில் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. அப்போது அவர் உரையாற்றுகையில், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தால் உடல்நலன், செல்வம், மன அமைதி உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்றும், உலக நலனுக்காக ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் வாழ வேண்டி கும்ப பூஜைகள் நடைபெற்றன. மதுரகாளியம்மன் உற்சவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 600-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாம குங்குமார்ச்சனைகள், அஷ்டகங்கள், ஆயுர்தேவி ஸ்துதிகள் பாராயணம் செய்தனர். தொடர்ந்து பஜனைகள் நடைபெற்றன.

மதியம் முதல் மாலை வரை நவாவரண பூஜை மற்றும் சண்டி மஞ்சரி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் மண்டலியின் ஆன்மிக தன்னார்வலர்கள் பங்கேற்று பூஜைகளை நடத்தினர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீ சண்டி மகாயாகம் நடைபெறுகிறது. இதில் வேத விற்பன்னர்கள் பங்கேற்று யாகம் நடத்துகின்றனர். பின்னர் மதுரகாளியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகாதீப ஆராதனை நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை மண்டலியின் நிர்வாக அறங்காவலர் நீலா மேற்பார்வையில் தன்னார்வலர்கள் செய்துள்ளனர். விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *