
செய்தியாளர் : ஜேசுராஜ்
விக்கிரமங்கலம், மே 14 –
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சந்திரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ராமன் (19) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று ராமன், தனது நண்பருக்கு சொந்தமான மொபட்டில் சந்திரபாளையம் கிராமத்திலிருந்து வி.கைகாட்டி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் சிமெண்ட் ஆலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த ராமனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராமனின் தாத்தா ராமச்சந்திரன் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

