
செய்தியாளர் : ஜேசுராஜ்
விக்கிரமங்கலம், மே. 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணவாளர் தலைமையில் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய வணிக நிலையங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது முத்துவாஞ்சேரி கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த புகழ் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், விற்பனை செய்வதற்காக கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கடை உரிமையாளர் புகழை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்

