பெரம்பலூரில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி – நடவடிக்கை கோரி பொதுமக்கள் வேண்டுகோள்

பெரம்பலூர்

 

செய்தியாளர் :வசந்த்

பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய இணைப்பு சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வடக்கு மாதவி சாலை, எம்.ஆர்.நகர், எதிரி ராயல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் கட்டுமான பொருட்கள், கடை விரிவாக்கங்கள் மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில இடங்களில் சாலைகள் குறுகலாக மாறியுள்ளதால் எதிரெதிராக வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் வடிகால் பாதிக்கப்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயமும் உள்ளது. இதனால் சாலை சேதமடைந்து பொதுமக்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த சாலைகளை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *