டாஸ்மாக் கடை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை

அரியலூர்

 

செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்

 

செந்துறை அருகே படைவெட்டி குடிக்காட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 6483-ஐ உடனடியாக மூடக்கோரி மக்கள் காவலர் கு.முடி மன்னன் தலைமையில் பெண்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், படைவெட்டி குடிக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையால் சுற்றுவட்டார கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தத்தனூர், வங்காரம், மனப்பத்தூர், நந்தியன் குடிக்காடு, சோழன் குடிக்காடு, வடக்கு மாத்தூர், அசாவீரன் குடிக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து மது அருந்துவதால் விவசாய நிலங்களில் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு சேதம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் தினசரி இந்தப் பகுதியை கடந்து செல்லும் நிலையில், குடிபோதையினரால் அவதியுறும் சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் பழமையான கருப்புசாமி கோயில் அமைந்துள்ள நிலையில், கோயில் வளாகத்திலும் அசுத்தம் மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றும் அரசின் உத்தரவை அமல்படுத்தி, கடை எண் 6483-ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என மக்கள் காவலர் கு.முடி மன்னன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் தத்தனூர், வடக்கு மாத்தூர், அசாவீரன் குடிக்காடு, முள்ளுக்குறிச்சி, படைவெட்டி குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

<b> Total Views: 95 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *