காசோலை மோசடி வழக்கில் குற்றவாளிக்கு ஓராண்டு சிறை

அரியலூர்

 

செய்தியாளர் : சுபாஷ் செல்வம்

 

அரியலூரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் குற்றவாளி என அரியலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்–I தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் விவரப்படி, தனது தொழில் அபிவிருத்திக்காக முகமது ரியாஸ், ஷேக் அப்துல்லாவிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட காசோலை, அரியலூரில் உள்ள வங்கியில் வசூலுக்காக சமர்ப்பிக்கப்பட்டபோது “Payment Stopped by Drawer” என்ற காரணத்தால் திரும்பியுள்ளது. இதையடுத்து புகார்தாரர் சட்ட நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உரிய காலத்திற்குள் தொகை செலுத்தப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் திருமதி இரா. சங்கீதா சேகர், புகார்தாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள், வங்கி ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்தார். மேலும், எதிரி தரப்பில் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் போதுமான ஆதாரங்களால் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் கருதியது.

 

இதையடுத்து, மாற்றுமுறை ஆவணச் சட்டம் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முகமது ரியாஸை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்தது.

மேலும், காசோலைத் தொகையான ரூ.3 லட்சத்தை புகார்தாரருக்கு இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *