அரியலூர் அருகே மூதாட்டி கொலை – 15 பவுன் நகைகள் கொள்ளை: உறவினர் உட்பட இருவர் கைது

அரியலூர்

 

விக்கிரமங்கலம், மார்ச் 25:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரிய திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (72) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு, 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 20ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமியிடம் இரண்டு இளைஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் பெயரில் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா. சாஸ்திரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, கருணாகரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயிரிழந்த ராஜலட்சுமியின் உறவினரான மேலப்பழூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (27) என்பவரும் சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை நகரில் பதுங்கியிருந்த சசிகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 15 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *