காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்: நாகப்பட்டினம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

நாகப்பட்டினம்

செய்தியாளர் : விஜய்

நாகப்பட்டினம், ஆக. 1:

நாகப்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 36 வார்டுகளைச் சேர்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காலி குடங்களை ஏந்தியபடி கூட்டரங்கிற்குள் நுழைந்த அவர்கள், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், அனைத்து வார்டுகளுக்கும் லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், குடிநீர் விநியோகத்தில் நிலவும் குறைபாடுகளை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் எனக் கோரி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, அதிமுக கவுன்சிலர்களுக்கும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதிலும் நடவடிக்கையும் இல்லை என்று கூறிய அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், கண்டனத்தின் அடையாளமாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த சம்பவத்தால் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *