
செய்தியாளர் : அருண் 90959 25936
ஆடி மாதத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழா வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் புதுமணத் தம்பதிகள் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது தாலியை மாற்றிக்கொள்வது வழக்கமாகும். மேலும், குடும்ப நலன், வளம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள்.

திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை முக்கிய பக்தர்கள் கூடும் இடமாக இருப்பதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு திரளுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய நீர் இல்லாத சூழல் நிலவி வருவதால், பக்தர்கள் சிரமமின்றி நீராடும் வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக நீராடும் வசதிக்காக ஆண்களுக்கு 20 தண்ணீர் குழாய்களும், பெண்களுக்கு 20 தண்ணீர் குழாய்களும் என மொத்தம் 40 தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகளவில் வரும் பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் நீராட முடியும்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள், சுகாதார பராமரிப்பு, தூய்மை பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ளன. விழா நாளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் பாதுகாப்பாக வழிபாடு மேற்கொள்ளவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அம்மா மண்டபம் பகுதியில் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகள், பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் வழிபாடு மற்றும் புனித நீராடலை மேற்கொள்ள உதவும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
<b> Total Views: 59 </b>

