
பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான பி.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது. தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ஜி.சுரேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில், கரும்பு டன்னுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.709.50 ஊக்கத்தொகையுடன் மொத்த கொள்முதல் விலை ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளதற்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில் டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்புகளை பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு எடுத்து அரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் விளையும் கரும்பையும் பெரம்பலூர் ஆலைக்கு எடுத்து அரைக்க அனுமதிக்க வேண்டும். எத்தனால் ஆலையை தொடங்க வேண்டும், மானியங்களை தொடர்ந்து வழங்க வேண்டும், உரங்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் ஆலையே நேரடியாக வழங்க வேண்டும், ஆலை அழுக்கு மற்றும் மொலாசஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பொட்டாஸ் விலையை குறைக்க வேண்டும், மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆலை அதிகாரிகள் கூறுகையில், கரும்பு காப்பீடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மற்றும் அதிக அளவில் கரும்பு வெட்டும் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மு.ஞானமூர்த்தி, ராஜா சிதம்பரம், சக்திவேல், சி.நிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

