
காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றச்சாட்டு
தூத்தூர்: கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழக அரசு 3-வது முறையாகவும் குளறுபடியான அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வெற்றி கழக தலைவர் தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை அணிந்து கொண்டு, கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு கீழ் உள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பிய விவசாயிகள் அவர்களுக்கு வாக்களித்தனர்.
இதையடுத்து முதலில் ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் என கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியதன் காரணமாக 2-வது முறையாக ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.35 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 7-ந் தேதி 7 அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் முதல்வர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர்கள் குழு உறுதி அளித்தது.
ஆனால், சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.75 ஆயிரத்துக்கு கீழ் உள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடன் தள்ளுபடி திட்டத்தை 3-வது முறையாகவும் குளறுபடியுடன் அறிவித்து, மீண்டும் மீண்டும் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
எனவே, விவசாயிகள் பெற்ற கடன் தொகையை தரம் பிரித்து பார்க்காமல், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே அளவில் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். அல்லது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் தெரிவித்துள்ளார்.

