
அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரை நிரந்தரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதாரத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அரியலூர் திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் மூலம் முதலமைச்சரின் முகவரிக்கு 90 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாக சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதாக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளித்து வருவதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தில், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் சுயஉதவிக்குழு முறைகளை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் அரசாணை 2(D) 62-ன்படி அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாநிலச் செயலாளர் டி. தண்டபாணி, சங்கச் செயலாளர் ரெ. நல்லுசாமி, செ. மாரியப்பன், வீ. உஷாராணி, ரா. ராணி, க. நாகூரான், எம். கோபி, ஆறுமுகம், செல்வமணி, உமா, மஹேஸ்வரி, கற்பகம், முருகானந்தம், இன்பக்கனி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஜெயங்கொண்டம் நகராட்சியிலும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் மா. தம்பிசிவம், செயலாளர் ம. சிலம்புசெல்வி, பா. ஜெயா, சிவக்குமார், கண்ணன், எஸ். சீதா, லோகநாதன், லட்சுமி, என். ராணி, புஷ்பா, ரூபாதேவி, சௌரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

