சமயபுரம் அருகே பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறல் புகார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

திருச்சி

 

திருச்சி: சமயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடைப் பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது தோழியுடன் வேன் கட்டணம் தொடர்பாகக் கேட்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மாணவியின் தோழியை வெளியே அனுப்பிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவியை மட்டும் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் அறைக்குள் அழைத்துச் சென்றதாகவும், அங்கு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவியின் கன்னம் மற்றும் கழுத்தில் முத்தமிட்டதுடன், அங்கிருந்து வெளியேற முயன்ற மாணவியின் கைகளைப் பிடித்து, சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பின்னர் வீட்டிற்குச் சென்ற மாணவி சோகமாகவும் மன உளைச்சலுடனும் காணப்பட்டதாகவும், இதனை கவனித்த அவரது தாய் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மாணவி அழுதபடி தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர் விசாரித்தபோது, பள்ளியில் 8 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மேலும் சில மாணவிகளிடமும் இதுபோன்ற பாலியல் சீண்டல் நடைபெற்றதாக தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் திரண்டதையடுத்து, தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பள்ளியின் பின்பக்க வழியாக வெளியேறி தலைமறைவானதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே தப்பியோடிய தலைமை ஆசிரியர் ஜெயராஜை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை விசாரணைக்காக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி மற்றும் பிற மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து தகவல்கள் மற்றும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் வழங்க வேண்டிய தலைமை ஆசிரியர் மீது இதுபோன்ற புகார் எழுந்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

<b> Total Views: 390 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *