
அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து, பல பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் விநியோகம் தொடர்ந்து சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல திறந்து செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சத்தால் ஒரே நேரத்தில் குவிந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், வதந்திகளை நம்பாமல் அமைதியாக இருக்குமாறும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் எரிபொருள் வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

