
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் மாரி விக்னேஷ், உலக நாடுகளின் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார்.
சுப்பிரமணி – முத்துமணி தம்பதியினரின் மகனான மாரி விக்னேஷ், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா சேகரித்து வைத்திருந்த பழைய நாணயங்களை பார்த்ததில் ஏற்பட்ட ஆர்வம், இவரை நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பில் ஈடுபடச் செய்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பழங்காலம் முதல் தற்போது புழக்கத்தில் உள்ள வரை 1200 நாணயங்களையும், 200 பணத்தாள்களையும் சேகரித்து சாதனை படைத்துள்ளார்.
இவரது சேகரிப்பில் மூங்கில் நாணயம், ஆற்காடு நவாப் கால நாணயங்கள், எலிசபெத் உருவம் பொறித்த நாணயங்கள், அண்ணா கையெழுத்து நாணயம், 12 ராசி குறியீடுகள் கொண்ட நாணயங்கள், உலகின் முதல் தங்கம்-வெள்ளி பணத்தாள்கள், மடித்தாலும் இருபுறமும் ஒரே வடிவில் காணப்படும் பிரேசில் பணத்தாள், பிளாஸ்டிக் பணத்தாள்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள பழக்கத்தினரின் உதவியுடன் இவை சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்து, நிறுவனர் நிமலன் நிலவன் தலைமையில் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாக அரங்கில் நடைபெற்றது. மேலும், மாணவன் சேகரித்த நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் கண்காட்சியாகவும் வைக்கப்பட்டிருந்தன. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மாநில துணை செயலாளர் செல்வராஜ், திருச்சி மாவட்ட தலைவர் குழந்தைசாமி, செயலாளர் தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

