துறையூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் காவலர்கள் கார்த்திக், நடராஜன், அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.5 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணையில், சென்னை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மாலதி என்பவர் அந்த தொகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. பணத்திற்கு தேவையான உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், தேர்தல் நடைமுறை விதிகளின் படி அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.5 லட்சம் ரொக்கம், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் பண பரிமாற்றங்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *