
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பச்சைமலை பகுதியில், மலைவாழ் மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சைமலை பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி சேலம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியும், திருச்சி மாவட்டத்தில் மூன்று ஊராட்சிகளும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான
108 ஆம்புலன்ஸ் சேவை
அரசு மருத்துவமனை அமைத்தல்
மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி
தேசியமயமாக்கப்பட்ட வங்கி வசதி
போன்ற 10 அம்ச கோரிக்கைகள் குறித்து இரு மாவட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்க அரசியல்வாதிகள் பச்சைமலைக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து, பிளக்ஸ் போர்டுகள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி பகுதியில் இன்று 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

