
செய்தியாளர் : ஜேசுராஜ்
விக்கிரமங்கலம், மே 12 –
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக ஸ்ரீபுரந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரோந்து பணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.
அப்போது, கூத்தாடி ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். விசாரணையில், அவர் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (28) என்பது தெரியவந்தது.
பின்னர் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த மது பாட்டில்களையும், பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைக்கண்ணனை கைது செய்தனர். மேலும், அவர் எங்கிருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்தார், யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார் என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

