நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு? விவசாயிகள் குற்றச்சாட்டு

அரியலூர்

 

 

செய்தியாளர்  : சுபாஷ் செல்வம்

 

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மஞ்சமேடு, திருமழப்பாடி, இளந்தங்கூடம், கண்டிராதீர்த்தம், மேலவரப்பான்குறிச்சி, ஏலாக்குறிச்சி மற்றும் கரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகாரப்பூர்வமற்ற கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு நிலையத்தில் ஒரு சீசனுக்கு சுமார் 600 முதல் 700 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படுவதால், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் கையாளப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சீசனில் மட்டும் ரூ.6.5 லட்சம் முதல் ரூ.8.3 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பி.சி.க்கள் நேரடியாக பணம் பெறாமல், அங்கு பணிபுரியும் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளர்கள் மூலம் பணம் வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல மையங்களில் சாக்கு மூட்டைகள் போதுமான அளவில் வழங்கப்படாததால், விவசாயிகள் தங்களே மூட்டைகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் நெல் பாதுகாப்பிற்கு தேவையான தார்பாய்கள் இல்லாததால், திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், தரம் குறைவதால் அரசு கொள்முதல் மறுப்பது அல்லது குறைந்த விலைக்கு ஏற்கப்படுவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், நனைந்த நெல்லை உலர்த்த போதிய வசதிகள் இல்லாததால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், சில இடங்களில் நெல் நீண்ட நாட்கள் கிடப்பில் இருப்பதால் தரம் மேலும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சட்டவிரோத கட்டண வசூலை தடுக்கவும், சாக்கு மூட்டைகள் மற்றும் தார்பாய்கள் போதுமான அளவில் வழங்கவும், சேமிப்பு மற்றும் உலர்த்தும் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *