
திருச்சி, ஜூன் 3:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு செலுத்தப்பட்ட டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) மருந்தின் தரக்குறைபாடு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அரசு செவிலியர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த 20 வயதுடைய சீதாலட்சுமி, மூக்கடைப்பு பிரச்சினைக்காக கடந்த மே 22-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த டெக்ஸாமெதாசோன் மருந்து செலுத்தப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே அவருக்கு கடுமையான இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நர்சிங் கல்லூரி மாணவிகள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை கோரினர். இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், உயிரிழந்த மாணவிக்குச் செலுத்தப்பட்ட அதே தொகுதி எண்ணைக் கொண்ட டெக்ஸாமெதாசோன் மருந்து மேலும் 3 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதும், அவர்களுக்கும் இதயத் துடிப்பு அதிகரிப்பு, இதயத் தசை பாதிப்பு, இதய செயலிழப்பு மற்றும் அதிர்ச்சி நிலை உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறிப்பிட்ட மருந்துத் தொகுதியின் உற்பத்தித் தரத்தில் குறைபாடு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், அந்தத் தொகுதி மருந்துகளைப் பயன்படுத்த தமிழக சுகாதாரத்துறை உடனடியாகத் தடை விதித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் கையிருப்பில் இருந்த அனைத்து மருந்துகளும் திரும்பப் பெறப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதேவேளை, உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் உடல் உறுப்புகள் சென்னை தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து கிடைக்கும் இறுதி ஆய்வறிக்கையின் அடிப்படையிலேயே உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் உறுதி செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
<b> Total Views: 33 </b>

