கலைஞர் 103-வது பிறந்தநாள்: அரியலூரில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள்

அரியலூர்

 

செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்

அரியலூர், ஜூன் 3:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் திமுக சார்பில் இரத்ததான முகாம், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

முன்னதாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச) போக்குவரத்து பிரிவு சார்பில் சாந்தோம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியையும் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் தொமுச சங்கக் கொடியை ஏற்றி வைத்து, கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வாலாஜா நகர் பேருந்து நிலையம் முன்பு அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சா.சி.சிவசங்கர், கலைஞர் மற்றும் பெரியார் திருவுருவங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் லதா பாலு, சி.சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கோ.அறிவழகன், மா.அன்பழகன், தெய்வ இளையராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு, நகர செயலாளர் இரா.முருகேசன், நகராட்சி சேர்மன் சாந்தி, துணைச் சேர்மன் தங்க கலியமூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

 

<b> Total Views: 109 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *