நாகை குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சியின் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

நாகப்பட்டினம் நகராட்சியின் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக தரம் பிரித்து வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பாக சேமிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் இரும்பு ஷெட் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை குப்பைக்கிடங்கு வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவி, இரும்பு ஷெட்டையும் சூழ்ந்தது. இதனால் ஷெட்டுக்குள் இருந்த பொருட்கள் உருகி சேதமடைந்தன.

தகவலறிந்து நகராட்சி பொறியாளர் கல்யாணசுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிலைய தீயணைப்பு அலுவலர்கள் குணசேகரன், ராஜராஜன் தலைமையில் நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும், நகராட்சியின் மூன்று குடிநீர் வாகனங்களும் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. புகையின் தாக்கத்தால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு சென்றனர். இந்த தீ விபத்தில் ஷெட் உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

 

<b> Total Views: 9 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *