
செய்தியாளர் :விஜய்
நாகப்பட்டினம், ஜூலை 26: நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகம்மது குத்புதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகுருதீன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அபுகாசிம், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ரபீக் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் முகம்மது யாமீன், மாவட்ட பொதுச்செயலாளர் கல்லார் மெய்தீன், பொருளாளர் தவ்பிக் மாலுமியார், திட்டச்சேரி கிளை உறுப்பினர் சல்மான் பாரிஸி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அபுகாசிம் நன்றி தெரிவித்தார்.

