
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அமைந்துள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான இடையேயான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.
போட்டிகளுக்கு முன்னதாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முசிறி டிஎஸ்பி முத்துக்குமார், கல்லூரி தாளாளர் ஆண்டி மற்றும் இயக்குநர் ஜனார்த்தனன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

100 மீட்டர், 200 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்டம், கபடி, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இடைவேளையில் சிலம்பாட்டம், பிரமிட் சாகசம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தன.

போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முசிறி டிஎஸ்பி முத்துக்குமார் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ராஜா மற்றும் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

