திருச்சி பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி

திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை கல்லூரித் தலைவர் முனைவர் சுஜாதா சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்தமிழ்சுடர் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பா. பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் அனைவரும் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சாலையில் பயணிக்கும் போது கவனமாகவும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்தும் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்த்து, பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயணிக்க வேண்டும் என்றும், சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

புல முதல்வர் முனைவர் வி. செல்வகுமார் பேசுகையில், மாணவர்கள் தனிப்பட்ட வாகனமாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்து வாகனமாக இருந்தாலும், செல்ல வேண்டிய இடத்திற்கு முன்கூட்டியே திட்டமிட்டு புறப்பட வேண்டும். மிதமான வேகத்தில் பயணித்து குறித்த நேரத்தில் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என்றார்.

தாமதமாக புறப்படுவதால் அவசரமாகவும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்ட வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சத்யபிரியா, மாணவர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் தண்டனைக்குரியவை என்றும், அவற்றுக்கான அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

முறையான ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் பா. பிரபாகரன், காவல் ஆய்வாளர் திருமதி சத்யபிரியாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

மேலும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திருச்சி பொறியியல் கல்லூரியின் சார்பில் போக்குவரத்து தடுப்பு வேலிகள் (Barricades) சிறுகனூர் காவல் நிலையத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ். கலைச்செல்வன் நன்றியுரை வழங்கினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *