பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் அருகே போலீசார் அதிரடி சோதனை
கோவை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷா என்பவரின் மகன் ஹரி ஷங்கர் ஷா (25) மற்றும் சுதாகர் கவாண்டே என்பவரின் மகன் நிகில் பிரவீன் எல்குந்த்வார் (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் குறித்து தகவல் தெரிவிக்க ‘நிழல்’ QR குறியீடு
கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருள் விற்பனை அல்லது சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிய வந்தால், காவல்துறையின் ‘நிழல்’ (Nizhal) QR குறியீடு வசதி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

