அரியலூர்: அரியலூர் நகரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் சுமார் 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு பேறுகாலத்தில் பின்பற்ற வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, கர்ப்பிணிகள் இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குழந்தை பிறந்த பின்னர் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும், 6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவையும் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். மேலும், அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இனிமையான மற்றும் ஆரோக்கியமான பேறுகாலம் அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் தி.காயதரி, மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் சுசீலா, யசோதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ப.பாலசுப்பிரமணியம், வட்டார ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

