
ஒரு மாதமாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
பெரம்பலூர், செப். 30: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரோவர் பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ள பாரதிதாசன் 3-வது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி குடியிருப்புவாசிகள் தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், இது தொடர்பாக பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களிடம் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தெருக்கள் மற்றும் காலியிடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி தேங்கி நிற்பதுடன், சில இடங்களில் தெருக்களிலும் பாய்ந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் தெருக்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காலை நேரங்களில் வீடுகளைச் சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் வீட்டிற்குள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கழிவுநீர் அடைப்பை சரிசெய்வதற்கு தங்களது தரப்பில் ஏதேனும் உதவி அல்லது ஒத்துழைப்பு தேவைப்பட்டால், அதனைச் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நகராட்சி அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, பாதாள சாக்கடை அடைப்பை உடனடியாகச் சரிசெய்து, கழிவுநீர் தேங்குவதைத் தடுத்து, பொதுமக்கள் துர்நாற்றமின்றி சுகாதாரமான சூழலில் வசிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் :சுபாஷ் செல்வம்
