ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குடிப்பதற்குப் பணம் தராததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.21 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்த ராஜின் மகன் தங்கவேலு (50). கொத்தனாராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி, குடிப்பதற்குப் பணம் தராததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தனது மனைவி மாரியம்மாளை (48) கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இதனைத் தடுக்க முயன்ற அவரது மகள் கவிதா (30) என்பவரையும் தங்கவேலு முதுகில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் தங்கவேலுவைக் கைது செய்து, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் (முழு கூடுதல் பொறுப்பு), தங்கவேலுவுக்கு ஆயுள் தண்டனையும், மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலைச்செல்வன் ஆஜரானார்.

