இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் பராமரிப்புப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பழமைவாய்ந்த தாமரைக் குளத்தைத் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்திப் பராமரிக்கும் பணிகளைத் தொடங்குவது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தாமரைக் குளம், மழைக்காலங்களில் முக்கிய வடிகால் பகுதியாகவும், பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி இடமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டு, காரைக்கால் அம்மையார் குளத்தைப் போன்று தாமரைக் குளத்தையும் மேம்படுத்தும் நோக்கில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக சுற்றுலாத் துறை, நாகப்பட்டினம் நகராட்சி, சேவைச் சங்கங்கள் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவற்றின் பங்களிப்புடன் முதற்கட்டமாக ரூ.1.60 கோடி மதிப்பில் குளத்தைத் தூர்வாருதல், சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.60 லட்சம் மதிப்பில் பூங்கா, அலங்கார விளக்குகள், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, அலங்கார வளைவுகள் மற்றும் குளத்தின் நடுவே மண்டபம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், குளத்தின் தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில் 10 ஆயிரம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டன.
திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் குளத்தைச் சுற்றியிருந்த சுற்றுச்சுவரும் நடைபாதையும் இடிந்து விழுந்தன. இதையடுத்து, குளத்தைச் சுற்றிலும் தகரத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பின்னர், ரூ.1.25 கோடி மதிப்பில் தாமரைக் குளத்தை மேம்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருந்த காலகட்டத்தில் குளம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் வருகை அதிகரித்ததுடன், படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
தற்போது, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்கவும் தாமரைக் குளத்திற்கு வந்து செல்கின்றனர். நகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கும் இக்குளத்தை மேலும் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, இந்திய கட்டுநர் சங்கத்தின் நாகப்பட்டினம் மையம் சார்பில் தாமரைக் குளத்தைத் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்திப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, இந்திய கட்டுநர் சங்க நாகப்பட்டினம் மையத் தலைவர் ஓம்சக்திராஜா, செயலாளர் முகம்மது கவுஸ், பொருளாளர் பாலாஜி உள்ளிட்டோர் தாமரைக் குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தாமரைக் குளத்தைத் தூய்மைப்படுத்தி முறையாகப் பராமரிப்பதன் மூலம், பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் அதன் அழகையும் பயன்பாட்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
