
ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, 3 செல்போன்கள் பறிமுதல்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 23 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம் டவுன் காவல் நிலைய போலீசார் 29.09.2026 அன்று காலை சுமார் 7 மணியளவில் பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபர்களை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தெற்கு பொய்கைநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகன் மகாகுமார் (30), பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் கணேஷ் (24), திருத்துறைப்பூண்டி கழுவமுள்ளி தெருவைச் சேர்ந்த ராஜா மகன் கார்த்திக்ராஜா (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒரு கீபேட் செல்போன் என மொத்தம் 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் குற்ற எண் 269/2026, NDPS Act பிரிவுகள் 8(c), 20(b)(ii)(c)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
