
பெரம்பலூர், ஏப். 2:
பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மற்றும் மகளிர் குழுக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.
பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு உலக நலன், நல்ல மழை மற்றும் மக்கள் ஆரோக்கியம் பெற வேண்டும் என பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
விழாவிற்கான அபிஷேக பொருட்கள் மற்றும் அன்னதான ஏற்பாடுகளை சங்குபேட்டை அன்னதான குழுவினர் மேற்கொண்டனர். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகி கண்ணபிரான், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

