
விக்கிரமங்கலம், ஏப். 17:
அரியலூர் மாவட்டம் அரியலூர் அருகே அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்துவின் மனைவி அமராவதி (65), விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பாபூர் கிராமத்தில் நடைபெற்ற இறப்பு சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணிகள் ஆட்டோவில் சென்றார்.
அப்போது வி.கைகாட்டி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அமராவதி ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமராவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமராவதியின் மகள் அன்பரசி அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் விசாரணை நடத்தி, ஆட்டோ ஓட்டுநரான சாளைக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (45) என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

