
செய்தியாளர் கேப்டன் வசந்த்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் தனித்தனியான பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆய்வின் போது, மையத்திற்குள் நுழைந்த ஆட்சியர், காவல்துறையினரால் பராமரிக்கப்படும் பார்வையாளர் கையேட்டில் வருகை விவரங்களை பதிவு செய்து கையெழுத்திட்டார். பின்னர், வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை நுழைவாயிலில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, அங்கும் கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து, சி.சி.டி.வி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட அவர், அனைத்து கேமராக்களும் செயல்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதி செய்தார். மேலும், 24 மணி நேர சுழற்சி கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்களின் வருகைப் பதிவையும் சரிபார்த்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஊடக மையத்தையும் ஆய்வு செய்து, இருக்கை வசதிகள் மற்றும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையையும் அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் கேட்டறிந்தார்.
ஆய்வு நிறைவில், மையத்திலிருந்து வெளியேறும் நேரத்தையும் பார்வையாளர் கையேட்டில் பதிவு செய்து ஆட்சியர் கையெழுத்திட்டார்.

