தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, நேற்றைய தினம்(மார்ச் 17), பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில். கீழ்கண்டவாறு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் காலை 08.30 மணியளவில், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலமாத்தூர் கிராமம், மருதையான் கோவில் பிரிவு அருகே, அரியலூர்-பெரம்பலூர் சாலையில், அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமம் தெற்குத் தெருவை சேர்ந்த ராஜிவ்காந்தி என்பவரிடமிருந்து ரூ.73,940 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது, கூட்டுறவு சார் பதிவாளர் காசியம்மாள் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தொகை பின்னர் குன்னம் வட்டாட்சியர் சின்ன துரையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் மதியம் 03.30 மணியளவில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர்-துறையூர் சாலை, செஞ்சேரி அருகே, பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாளையத் ளையத்தைச் தை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து ரூ.63,000 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது, வட்டாட்சியர் பழனிச்செல்வன் தலைமையிலான பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இத்தனையடுத்து மாலை 04.40 மணியளவில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, கூட்டுறவுத்துறை கண்காணிப்பாளர் கௌசிகன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனையின்போது, சேலம் மாவட்டம் சீரநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஆத்தியப்பன் என்பவரிடமிருந்து ரூ.36,000 மதிப்பிலான 6 மிக்ஸிகள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு மொத்தம் ரூ.1,36,940 | ரொக்கம் மற்றும் ரூ.36,000 மதிப்பிலான பொருட்களும் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் சுபாஷ் செல்வம்


