குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

துறையூர்

திருச்சி, மே. 2-

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட ஜோதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், மணி தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், ஜோதி வர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே மணி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

மனமுடைந்த நிலையில் இருந்த மணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மணி சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மணியின் சகோதரர் ராமசாமி, உப்பிலியபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *