
செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு பொறுப்பு வழங்கியுள்ளது. அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் சில சிமெண்ட் ஆலைகள் அரசு விதிமுறைகளை மீறி 250 அடி முதல் 1000 அடி ஆழம் வரை சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை தோண்டி எடுத்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கனிம வள கொள்ளையை தடுக்க தமிழக முதல்வர் விஜய் கல்குவாரிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் இயங்கி வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிலும் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்த சுரங்கங்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றிய வரலாறு இல்லை என்றும், சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் அரியலூரில் 50 கிலோ சிமெண்ட் மூட்டையை ரூ.100-க்கு வழங்கும் வாய்ப்பு இருந்தும், சிண்டிகேட் அமைத்து அதனை தவிர்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
<b> Total Views: 78 </b>

