
செய்தியாளர் :விஜய்
நாகப்பட்டினம், ஜூன் 1:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பிரவீன்குமார் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஆகாஷ், மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன்குமார், நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“2017-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் (ஐ.ஏ.எஸ்.) சேர்ந்த நான், மதுரை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சார் ஆட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளேன். மேலும் மதுரை மாநகராட்சி ஆணையராகவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் வட்டார துணை ஆணையராகவும், பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.
தற்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், கடலோர மாவட்டங்களின் தனித்துவமான சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ள இந்த மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மாவட்ட மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பான முறையில் சென்றடைய உறுதி செய்யப்படும்.
இயற்கை வளங்கள் நிறைந்த, வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்புமிக்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரவீன்குமாருக்கு அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
<b> Total Views: 9 </b>

