துறையூரில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

துறையூர்

துறையூர் :

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

துறையூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரமணி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், அங்கக மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், உயிர் உரங்களை பயன்படுத்துதல் மற்றும் பயிர்களுக்கு காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

வேளாண்மை அலுவலர் கமல், வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்து விளக்கினார். மேலும், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் உள்ளிட்ட திரவ உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இயற்கை விவசாயி சுந்தர்ராஜ், இயற்கை வேளாண்மை மூலம் மண் வளத்தை மேம்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். பஞ்சகாவியா, மீன் அமிலம், தேமோர் கரைசல், ஜீவாமிர்தம், பழக்கரைசல், முட்டை கரைசல், பூச்சி விரட்டி கரைசல் மற்றும் இலைத்தழை கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறைகள், பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டிய அளவுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார்.

மேலும், பழக்கரைசல், முட்டை கரைசல் மற்றும் இலைத்தழை கரைசல் தயாரிக்கும் முறைகளை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தார். தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்னதாக, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் வரவேற்று, அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன் மற்றும் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.

 

<b> Total Views: 30 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *