
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பழக்கம், போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுதல், போக்சோ சட்டம், திருமண வயது மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை கல்லூரியின் தலைவர் முனைவர் சுஜாதா சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் த. முத்தமிழ்சுடர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகரன் மற்றும் புல முதல்வர் முனைவர் வி. செல்வகுமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் பேசுகையில், பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான இடையூறுகள் மற்றும் வன்முறைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
புல முதல்வர் முனைவர் வி. செல்வகுமார் பேசும்போது, சமூக வலைதளங்கள் மற்றும் கைபேசி பயன்பாட்டில் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயன்பாட்டைக் குறைத்து கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை காவல்துறை உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் யுவராணி, சினேகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினர்.

காவல்துறை உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி பேசும்போது, பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயது தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள், ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை பகிர்வது உள்ளிட்ட செயல்கள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து காவல்துறை அதிகாரி யுவராணி, போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். சிறுவயது காதல், பாலியல் சீண்டல், தவறான முறையில் தொடுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றால், பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி காவல்துறையை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
காவல்துறை அதிகாரி சினேகா பேசும்போது, பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் மற்றும் அவசர உதவிகளுக்கு காவல்துறை உதவி எண் 1091-ஐ பயன்படுத்தலாம் என தெரிவித்தார். மேலும், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை பெறுவதற்காக ‘காவல் உதவி’ செயலியை மாணவர்கள் தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘காவல் உதவி’ செயலியை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமிக்கு கல்லூரி முதல்வர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் கல்வியாண்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ராஜலட்சுமி (ECE) நன்றியுரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ். கலைச்செல்வன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் ஒருங்கிணைப்பாளர் செல்வி விக்னேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.
