நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகப்பட்டினம்

9 பயனாளிகளுக்கு ரூ.78,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – ஆட்சியர் வழங்கினார்

நாகப்பட்டினம், செப்.30:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் இன்று (30.09.2026) நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தையல் இயந்திரம், வங்கிக் கடன், உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ரூ.78,140 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில், 9 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.78,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,600 மதிப்பிலான ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, ஒருவருக்கு ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலி, 2 பேருக்கு தலா ரூ.14,440 வீதம் ரூ.28,880 மதிப்பிலான திறன்பேசிகள் வழங்கப்பட்டன.

மேலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,500 வீதம் ரூ.13,000 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், ஒருவருக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலி கருவி, ஒருவருக்கு ரூ.595 மதிப்பிலான முழங்கைதாங்கி மற்றும் ஒருவருக்கு ரூ.10,815 மதிப்பிலான டெய்சி பிளேயர் ஆகியவை வழங்கப்பட்டன.

மனுக்களுக்கு உடனடி தீர்வு

மேலும், இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கையாக 2 பயனாளிகளுக்கு பேருந்து பயண அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான பரிந்துரைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *