கோவையில் நூதனத் திருட்டு: டைட்டல் பார்க்கில் பைக் திருட்டு; நீலாம்பூரில் ஹெல்மெட்டும் அபேஸ்!

கோவை

 

போலீஸார் போன் செய்த பிறகே பைக் திருடுபோனது உரிமையாளருக்குத் தெரிந்தது – பீளமேடு, நீலாம்பூர் காவல் நிலையங்களில் புகார்!

கோவையில் டைட்டல் பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர், நீலாம்பூரில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஹெல்மெட்டையும் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கொடிசியா அருகே உள்ள டைட்டல் பார்க்கில் செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், நீலாம்பூர் காவல் நிலைய போலீஸார் அந்த ஊழியரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நீலாம்பூர் பகுதியில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டைத் திருடிச் சென்றதாகக் கூறி, அதனைத் திருப்பிக் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர், தான் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், நீலாம்பூர் பகுதிக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது இருசக்கர வாகனம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ளதா எனச் சரிபார்க்குமாறு போலீஸார் கூறியுள்ளனர்.

அதன்பேரில் கீழே சென்று பார்த்தபோது, தனது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதன் பின்னரே, தனது வாகனம் திருடுபோனதை அவர் அறிந்துள்ளார்.

இதற்கிடையே, டைட்டல் பார்க்கில் இருந்து இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர், நீலாம்பூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு கடையின் அருகே வாகனத்தை நிறுத்திய அவர், இயற்கை உபாதை கழிக்கச் செல்வதுபோல் நடித்துவிட்டு, அருகில் மற்றொரு வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஹெல்மெட்டைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஹெல்மெட் திருடுபோனதைக் கவனித்த அதன் உரிமையாளர், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண் கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வாகனப் பதிவு எண்ணின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அந்த வாகனம் டைட்டல் பார்க்கில் பணியாற்றும் ஊழியருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தனது இருசக்கர வாகனம் திருடுபோனது தொடர்பாக அதன் உரிமையாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹெல்மெட்டை இழந்த நபர் நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரே நபர் இருசக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும் திருடிச் சென்ற இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், தொடர்புடைய நபரைப் பிடிக்க பீளமேடு மற்றும் நீலாம்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *