அரியலூர் மக்களின் உயிர் முக்கியமா? சிமெண்ட் ஆலைகளின் வளர்ச்சி முக்கியமா?

அரியலூர்

 

செய்தியாளர் சுபாஷ் செல்வம் 

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எப்போது?

தொடரும் லாரி விபத்துகள்… பறிபோகும் உயிர்கள்… வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள்! தமிழக முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் மௌனம் காப்பது ஏன்?

அரியலூர்:

சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய மாவட்டமாக விளங்கும் அரியலூரில் பல்வேறு தனியார் சிமெண்ட் ஆலைகளும், அரசு நிறுவனமான டான்செம் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கனிம வளங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி அடையும் இந்நிறுவனங்களால் அரியலூர் மக்களுக்கு கிடைத்த பலன் என்ன? என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிமெண்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் குவாரிகளுக்குச் செல்லும் ஏராளமான லாரி, டிப்பர் வாகனங்களால் சாலை சேதம், தூசி மாசு மற்றும் தொடர் விபத்துகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. கடந்த பல ஆண்டுகளில் இவ்வாகனங்கள் தொடர்பான விபத்துகளில் உயிரிழப்புகளும், கால்நடைகள் பலியான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, 2022-ல் கல்லங்குறிச்சி பகுதியில் லாரி மோதி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடரும் விபத்துகளைத் தடுக்க லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதிக பாரம் ஏற்றுவதைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நிரந்தர நடவடிக்கைகள் என்ன? விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்கவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மறுபுறம், ஆயிரக்கணக்கான உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் நிலையில், மாவட்டத்தின் முக்கிய சிமெண்ட் ஆலைகள் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று எத்தனை பேருக்கு வேலை வழங்கியுள்ளன? தகுதியுள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதது ஏன்? வெளியூர் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக எழும் புகார்கள் உண்மையா? என்பதை நிறுவனங்கள் வெளிப்படையாக விளக்க வேண்டும்.

மேலும், நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்புக்காக இதுவரை செய்த பணிகள் என்ன? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்பதையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.

இத்தனை பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்தும், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? பொதுமக்களின் புகார்கள் மற்றும் தொடர் விபத்துகள் குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதா? நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அதன் விவரங்களை ஏன் பொதுமக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை? நடவடிக்கை இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. பொதுமக்களின் இந்தக் கேள்விகளுக்கு முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

மாவட்டத்தின் கனிம வளங்களைப் பயன்படுத்தி நிறுவனங்கள் வளர்ச்சி அடையலாம்; அதற்காக அரியலூர் மக்கள் உயிரைப் பலிகொடுக்க வேண்டுமா? வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளூர் இளைஞர்களுக்கு ஏன்? சிமெண்ட் ஆலை நிர்வாகிகளைக் கூட்டத்திற்கு அழைத்து விபத்துகளைத் தடுக்கவும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஏன் தீவிர நடவடிக்கை எடுக்கக்கூடாது?

அரியலூர் மக்களின் உயிர் பாதுகாப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் முக்கியமா அல்லது நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மட்டுமே முக்கியமா? என்ற கேள்விக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய பதிலையும் செயல்பாட்டையும் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *